காஞ்சீபுரத்தில் ஆனை அமர்ந்த தோற்றத்திலுள்ள ஒரு குன்றின்மீது உலக நலத்தின் பொருட்டு வேள்வியொன்றைச் செய்தார் நான்முகன். அதனின்றும் வெளிப்பட்ட திருமாற் சிலையின் முகம் பொலிவிழந்து வடுக்கள் நிறைந்துள்ளமை கண்டு அதை அத்தீயிலேயே விட்டு வேறு சிலைக்கான ஆகுதி வழங்க, மீண்டும் அங்ஙனமே அம்முகத்தோடே திருமால் தோன்றவும், இந்நிகழ்வினைத் தடுக்க இந்திராதியர் வேகவதி என்னும் பெண்ணை ஆறாகப் பெருக்கெடுத்தோடி வேள்வியை அழிக்க முற்படுதலும் அதைத் தடுக்கத் திருமால் தன் அரையில் ஆடையின்றிக் கிடந்து அப்பெண்ணாறு வெட்கித் திசைமாறிச் செல்லுமாறு செய்து வரதனாக அயனுக்கருளியமையும் கூறுவது. காஞ்சீபுரத்தின் வைணவத் தலபுராணமாமிது.
கரையும் மனத்தயன் காசினியோர் வாழ
நிறைந்த பரிவேட்டல் நாடித் – தரையிறங்கிக்
கச்சிநகர் அத்திகிரி வரதன் தாள்பணிந்தான்
இச்சித்து வேண்டி இதை ! 72
வேண்டியிதை உள்ளத்தின் வேட்கை விளங்கிடக்
காண்தகும் நல்லன கைவரத் – தூண்டிடும்
வேட்டல் துவங்கினன் வாணீசன் தன்மனம்
கூட்டிய ஆகுதி கொண்டு ! 73
ஆகுதி கொண்ட அவிசொரி வேள்வியின்
வேகுதீ யூடே வனப்புடை – யோகத்தின்
தூண்டும் ஒளியுடன் தோன்றினன் அர்ச்சையாய்
யாண்டுதிகழ் அத்திகிரி யோன் ! 74
யோனி கணக்கறு யோகத்து எல்லையானை,
ஆணி வரதனைத், தன் அங்கையாற் – பேணிக்
கரம்கொண்டு அணைத்தான், களிப்பில் மிதந்த
வரமழை வல்ல அயன் ! 75
வரமழை வல்ல அயன்தன் கரத்து
வரதனைக் காணவும் வாட்ட – முறநின்று
வள்ளல் முகமெங்கும் வாள்தழும்பாய் வடு
உள்ளதைக் கண்டான் உறைந்து ! 76
உறைந்தயன் அச்சிலையில் ஊற்றந் தளர்ந்து
மறைந்திட நெய்பெய்தும் மறையா – துறைந்த அப்
பேரருளாளப் பெருமானைத் தன் கையால்
வாரி யணைத்தான் வரிந்து ! 77
வரிந்தணைத்த தந்தை வரதராசன் முன்
புரிந்திடு வேட்டலிற் பாய்நீர் – விரிவான
வெள்ள மழிவினை வேகமா யேற்படுத்தத்
துள்ளிக் கரைபுரண்ட து ! 78
கரைபுரண் டோடிக் ககனநீர், வேள்வி
நிரைசெகும் நோக்கில் நிவந்து – தரையிறங்கி
வேகத்தால் வீறிட்டு வேகவதி யாய்ப்பாயச்
சோகத்தில் ஆழ்ந்தார் சுரர் ! 79
சுரரும் இருக்கனுஞ் சூழ்ந்திட்ட துன்பத்
தரம்வெருவி நின்று, அத்திகிரி – அருளாளன்
பாதம் பணிந்தனராம், போர்க்கோல அட்டபுயத்
தாதைக்கண் இல்லை தவிப்பு ! 80
தவித்திட்ட நான்முகனும் தேவரும் வேள்விக்கண்
அவிசொரியா நின்றதை ஆத்தன் – கவனித்து
வேகவதி செல்வழியில் வெற்றுடம்பாய்க் கிடந்தான்
யோகத் துயிலினை யேற்று ! 81
துயிலினை யேற்றவனின் துய்யுநிலை வெட்கி
வயற்புனல் வேகவதி வேற்றுச் – செயலின்றி
விண்ணேக, ஓதிமனும் வேள்வி முடித்தனனால் ;
மண்ணோ ரடைந்தார் மகிழ்வு ! 82
மகிழ்வடைக் காரணம் மண்ணில் வரதன்
திகழ்க்கோயில் கச்சிநகர் தன்னில் – முகிழ்த்ததே
வண்ணமரையோன் வேட்பின் வார்சிலை காத்திடும்
மண்ணோர் தடைகளை மாய்த்து ! 83
தடைகளை மாய்த்துத் தரணியோர் வாழ
உடைகளை தாதையின் உற்ற – அடைவறு
அன்பு மகனுக்காய் ஆற்றும் கடிமுறிப்
பண்பும் பகர்ந்திடுமோ பார் ! 84