வேதங்களுக்கு மறையென்ற பெயர் வழங்கும் காரணம் சொல்லும் படலம். வேதங்களை ஒலிக்கற்றை அலைகளாக மாற்றி தன் இருக்கையான தாமரை இதழ்களில் மறைத்து வைத்தான் நான்முகன். அதையறிந்து பரிமுகம் கொண்ட அரக்கனொருவன் நான்முகனைப் போருக்கழைத்து அது முடியாமற் போக, வேதங்களைக் கவர்ந்து சென்று ஊழி நீரில் ஒளித்து வைக்க, பறிகொடுத்த நான்முகன் அரக்கனொடு போரிடுவதைத் தவிர்த்துத் திருமாலிடம் முறையிட,அவர் மச்சாவதாரம் செய்து பரிமுகனை வீழ்த்தி மறைமீட்டது சொல்லப்படுகிறது.
ஆற்ற நயந்தமறை அஃகும் ஒலியதிர்வாய்
மாற்றி விரிஞ்சன் மரைமலரில் – சாற்றி
அமரப் பரிமுக ஆரவுணன் என்போன்
சமரம் புகுந்தது சார்பு ! 51
சார்புடைத் தெய்வம் சமரை விரும்பாது
போர்ப்படை ஏந்திடும் புல்லனை – வார்ப்புடைச்
சொல்லால் சமரசம் சோடித்துச் சூழ்ந்ததைச்
சொல்ல அரிதெனச் சொல் ! 52
சொல்லாற் பரிமுகன் சோர்ந்து விடவும்சொல்
வல்லான் அயனிடம் வீறுகாட்ட – கில்லாது
வேதத்தைக் கைகவர்ந்து வெட்டென ஊழியின்
ஓதத்தில் ஆழ்ந்தான் ஒளிந்து ! 53
ஒளிந்திட்ட வல்லரக்கன் ஊழிநீரில் ஆழக்
களித்திட்ட வேதம் கவர்தற் – கெளிவறு
இயலா வகைவைத்தான் ; ஈந்தமறை மீட்கக்
கயலா னதுமால் கதை ! 54
கதைத்த அயனைக் கருமுகில் வண்ணன்
பதைத்தல் தவிர்வாய், புரவி – வதைத்து
மறையொலி சேர்ப்பது மீட்டும் நடக்கும்
பொறையிரு என்றான் பொலிந்து ! 55
பொலிந்திடும் பிரானின் புலமுடைச் சொல்லால்
சிலிர்ந்திட்டு அமைந்து சிருட்டி – மெலிந்தது
வேதம் மறைந்த விதிப்பயன் என்றயன்
ஏதமறக் கற்றனன் ஏற்று ! 56
ஏற்ற கலங்கள் எதிர்நோக்கின் மீதளித்து
ஆற்றும் பெருமான் அவதார – மேற்றுப்
பெருமீனாய் நீரில் பரிமுகனை வீட்டி
உறுவேதம் மீட்டான் உகந்து ! 57
உகந்தயன் மீண்டும் உலகு படைக்க
வகுத்த வழிமுறையில் வீறு – புகுந்ததென
ஊழி முடிந்துயிர் ஊட்டும் தொழிலினைப்
பாழியுறச் செய்வது பாங்கு ! 58