உயிர்களை உருவாக்கும் நான்முகன், பிரம்மாத்திரம் என்னும் தன்னாற்றல் படைக்கலத்தால் பிரபஞ்சத்தையே அழிக்கும் ஆற்றல் பெற்றும் ஒரு குழவியை அழிக்காமல் காக்க உடன்பட்ட நிகழ்வைக் கூறும் படலமாகும். அபிமன்யுவின் மனைவி உத்தரையின் வயிற்றிலுள்ள சிசுவைப் பிரமாத்திரத்தால் அழிக்க முற்படுகிறான், அசுவத்தாமன். அதனை முறியடிக்க அருச்சுனன் கண்ணனிடம் வேண்ட, கண்ணனும் அக்கணை உத்தரையின் கருவளர்க் குழவியைத் தாக்காதிருக்க வகைசெய்கிறான். நான்முகனும் படையுருவில் பாய்ந்து கருவான பரீக்ஷித்து என்ற சிசுவைக் கொலை செய்யாமல் விடுகிறான். ஆனால், அதுபோலன்றி மாறாகத் தவறு செய்த இராவணனை அழிக்கப் புகுந்ததையும் இராமன் விட்ட பிரமாத்திரம் இராவணனை அழித்துவிட்டுத் திரும்பியதும் பேசப்படுகிறது.
அன்பே சிவமென ஆன்ற திருமறைகள்
முன்பே பகர்ந்தது முன்னிறுத்தி – மன்பதை
வாழும் வழியுணர வல்வினை நாடகம்
சூழ நிகழ்ந்தது அன்பின்சூது ! 42
சூது புரிந்தச் சகுனியர் மாள மால்
தூது நடந்து துணைசெற்ற – போது
கணையாகப் பாய்ந்தும் கருவழிக்க மாட்டாத்
துணையா னவனைத் துதி ! 43
துதித்த தசமுகன் துன்னலர்தாம் வீழ்த்தா
மதிப்பை யிழந்துபின் மாள – மிதிலையாள்
காரண மாயினும், காகுத்தன் எய்ததே
ஆரணன் உட்புகுந்த அம்பு ! 44
அம்புவியில் உள்ள அனைத்தும் படைத்தலில்
சம்புவின் வேலைச் செறுதலில் – உம்பரைக்
காக்கும் வரங்களாய்க் கைதந்து முத்தொழிலை
ஆக்கும் கடவுள் அயன் ! 45
அயனின் கணையை அழிக்கும் இணையை
மயனும் விசுவகர் மாவும் – செயற்கண்
முயன்றாலும் ஏதும் முடியாது என்றோர்ந்தால்
வியப்பாம் இருக்கனின் வீறு ! 46