முருகப் பெருமான் சிறுவனாயிருந்த போது நான்முகனிடம் பிரணவத்தின் பொருள் கேட்க, அவரும் சிறுவன்தானே என்றெண்ணித் தமக்குத் தெரியாதென விளம்ப அவரின் பிரதான சிரமான “ஸம்ப்ராக்ஞம்” என்னும் தலையில் முருகப் பெருமான் குட்டுகின்றதும் அஃதுடன் நில்லாமல் அயனைச் சிறையிலடைப்பதும் தேவரும் ஈசனும் வந்து முருகனுக்கு அறிவுரை கூறி நான்முகனைச் சிறையினின்றும் மீட்பது வரையுள்ள செய்திகளை விளக்குகின்றது.
திரிந்தலைந் தில்லாளைத் தேடி இணைந்த
விரிஞ்சனின் சால்பு விளங்கும் – விரிநிகழ்வே
ஓமெனுஞ் சொற்பொருளை ஓதிமனைக் கேட்டதாம்
தூமலர் வேலன் துணிந்து ! 36
வேலன் துணிந்து வினவியதும் வேதசன்
சாலக் குழைந்துச் சடைமுடியான் – பாலனிடம்
ஒன்று மறியேன் உயர்பொருளை நீயுரையாய்
என்று பகர்ந்தான் இயைந்து ! 37
இயைந்தவன் நாடகம் இவ்வுலகில் உள்ளோர்
கயந்திடார் என்பதால் கந்தன் – வியந்தயன்
குஞ்சிகை தான்பற்றிக் குட்டினான் சென்னியில்
மஞ்சிகை கீழ்த்தெறிக்கு மட்டு ! 38
மட்டிலாத் துன்பத்தால் மனமுடைந்து வாணியை
விட்டகன்ற நாள்நினைவு வாட்டிடப் – புட்கரத்தில்
அல்லல் படுத்திய அப்பயனே என்றோர்ந்தான்
வெல்ல முடியா விதி ! 39
விதியோனைச் சண்முகன் வென்றதும் விதியே
முதியோனாய்ப் பாரா முருகன் – விதியோடு
மேலும் விளையாட மேனி பிணைத்தயனைச்
சீலமறக் கொண்டான் சிறை ! 40
சிறையிற் புகுந்த சதுமுகனை மீட்க
வரைமகள் கேள்வனும் வானோர் – நிரையுடன்
மைந்தற் கிணங்கியதும் மாணவம் பூண்டதுவும்
ஐந்தவி காந்தன்பால் அன்பு ! 41