கோவிந்த பட்டாபிஷேகத்தைத் தொடர்ந்து கண்ணனது மாயங்கள் உலகோர் அறியும் பொருட்டு நான்முகன் தானே ஒரு நாடகம் நடத்தும் நிகழ்வைக் கூறுவதாம். ஒரு நாள் ஆயர்பாடிச் சிறுவர்களையும் மாடுகளையும் கன்றுகளையும் ஓர் குகைக்குள் ஒளித்திட்டான் நான்முகன். இதையறிந்த கண்ணன், அத்துணை உயிர்களாகத் தானே வடிவெடுத்து மாறி அவரவர் இல்லங்களுக்குச் சென்று சேர்ந்தான். பல நாளாகியும் எவ்வித மாற்றமும் யாரும் உணரா வண்ணம் கண்ணன் வீறு அமைவதைக் காசினியோர்க்கு நான்முகன் காட்டும் படலம்.
வீறுபடு வாசவனின் வீரம் வரையெடுப்பில்
தூறுபடக் கண்டும் துணிந்தயன் – சீறுசினம்
இன்றியே கண்ணனை ஏய்க்க நினைத்துமென் ?
வென்றி தராதவோர் வார்ப்பு ! 47
வார்க்கும் வகையறிவோன் வன்பிலத்தில் ஆநிரை
சேர்த்தடைத் தாயர் சிறுவரையும் – பார்த்தனின்
சேயன்சேய் காத்தானும் செல்லா அளையொளித்தான்
மாயன் முறுவலிக்கு மாறு ! 48
மாறாப் பரந்தாமன் மாறினான் பால்மணம்
மாறாச் சிறுவராய் மாநிரையாய் – மாறாது
அடைந்தனர் எல்லோரும் தங்குடில் ஆங்கே
விடைபெற்றது இருக்கன் வீறு ! 49
இருக்கனின் வீறதுவும் இற்றபின் கண்ணன்
பெருக்கிட்ட மாயங்கள் பேரா ; – தருக்கழிய
வல்வினை வீழ்ச்சியே வேதத்தின் சாரமென
நல்வினை ஆற்றும் நயந்து ! 50