பார்வதிதேவி சிவனால் சபிக்கப்பட்டு மீனவப் பெண்ணாகப் பிறக்க, அவளை மணமுடிக்க அரனார் நான்முகனைத் திமிங்கிலமாகி நெய்தல் நிலமக்களை அச்சுறுத்தும்படி கேட்டுக் கொண்டார். நெய்தல் மன்னனும் கன்யா சுல்கமாக மீனை அழிப்பவனுக்கே தன் பெண்ணென்று பறைசாற்ற, அங்ஙனமே அயனும் மீனாகிச் சிவன் கையால் மாண்டு பிறகு நான்முகனாய் மீண்டு அவர்தம் மணத்தை நடத்தி வைத்து உமையாளைச் சாபத்தினின்றும் மீட்க உதவியது கூறும் படலம்.
பாருலகை வாழ்விக்கப் பன்னெடுங் காலமாகப்
பூரணமாய்ச் சூழ்தீமை பொன்றுவித்து – வேறுபடும்
சீருலகாய் மாற்றிச் செறிவூட்ட முத்தெய்வஞ்
சாருலகாம் பூமியிதன் சால்பு ! 85
பூமியிதன் சால்பினிற் புன்மை மறம்நீக்க
நேமியனும் நஞ்சுடை நாகமணி – வாமியனும்
பூண்ட அவதாரம் பற்பலப் போலயனும்
மாண்டது மீனாய்ச்சிவன் மாட்டு ! 86
மாட்டில் பவனியுறு மாதுமை செய்தசிறு
கேட்டில் விளைந்தது மீன் கோறலாம்; - மேட்டுமுலைப்
பார்வதியாள் தன்சொல்லைப் பாரா திருந்ததாற்
சேர்மதியோன் கொண்டான் சினம் ! 87
சினத்தாற் சபித்தான் சிவனே உமையை
மனத்துயர் கொள்ளாது மீனின் – இனத்தார்க்கு
நேர்ந்திடும் துன்பங்கள் நீங்க அவர்மகளாய்ச்
சேர்ந்திடுக நெய்தலைச் சென்று ! 88
சென்றங்கு நான்முகனைச் சேர அழைத்துத்தன்
மன்றற்கு நற்றுணை மீனாகிப் – பொன்றிடும்
செய்கை தனைச்சொல்லிச், சீராய் அரங்கேற்ற
நெய்தல் நிலமேகி னான் ! 89
ஏகியவன் வேலை இறங்கா இளைஞருக்கு
ஆகி அவர்த் துன்பம் களைந்திடப் – போகுவென்
என்றான்; கடல்பாய்ந்து எதிர்ப்பட்ட மீன்களைக்
கொன்றான் சிவனும் குவித்து ! 90
குவிக்கும் கொலைசெய்து கூரெயிற்றுச் சேல்கள்
புவிக்கரு மானிடரைப் பொன்றாப் – பவித்திரம்
கொண்டவை யென்றுமீன் கோனும் பகரத் திண்
கொண்ட தோளன் ஆழ்ந்தான் கடல் ! 91
கடல்சேர்ந்த கஞ்சரனும் காண அருநீள்
உடல்சேர் திமிங்கில ஊனொடு – அடலாகி
நஞ்சுண்ட கண்டனொடு நேராய்ச் சமரிடவும்
அஞ்சினர் விண்ணோர் அயர்ந்து ! 92
விண்ணோர் அயர்ந்து வெருவிடப் போர்புரிந்த
திண்ணார் சடையனின் தோள்வலி – எண்ணாது
போதன் துணைசெயப்போந்து, அடலாய் நாட்டிய
நாதன்கண் பொன்றின னாம் ! 93
பொன்றிட்ட மாமீனைப் பார்த்த நெய்தல்கோனும்
வென்றிட்ட கண்ணுதல் வீரனைக் – கன்றிட்ட
ஆவினைப்போல் அன்பால் ஆர்த்துருகிக் கேட்டனன்
மேவியது கூறெனு மாறு ! 94
கூறெனுஞ் சொல்கேட்ட கூத்தன், குலக்கொடியைத்
தாரும் மணமுடித்துத் தாரமாய்ச், – சீருமையே
உன்தவப் பெண்ணாம் உவர்மீன் சதுமுகனாம்
என்றவன் சொன்னான் இசைந்து ! 95
இசைந்து திமிங்கிலமாய் ஈசற்கு உதவி
அசைந்து இரைவேலை யகன்று – நசையொடு
உமைபங்கர் மன்றலை ஊற்றமுடன் ஆற்றி
அமைந்தனன் ஆங்கே அயன் ! 96