நான்முகக் கடவுளின் பண்பும் மாட்சியும் பற்றி வரையப் படுகிறது. சிவனார் கோபத்தால் தன் சிரமொன்றைக் கொய்ததையும் தன் மருமகனான மன்மதன் (திருமாலின் மகனாகக் கருதப்படுவதுண்டு) நெற்றிக் கண்ணால் எரிக்கப்பட்டதையும் அதனால் மகள் ரதிதேவியின் மங்கலம் அழிக்கப்பட்டதையும் காழ்ப்பற்று மனதிற் கொள்ளாமல் மறந்து, பிறருக்குதவும் பண்பு மாறாமல் சிவனார் திருமணத்தை முன்னின்று நடத்திய நான்முகக் கடவுளின் மாண்பும் மாட்சியும் பரக்கப் பேசப்படுகிறது.
இவை தவிர, நான்முகனது பெருமைகளை உலகோர் உணர்ந்து போற்றி வணங்கினால் அனைத்து நலனும் கிடைக்குமென்றும் அன்னை கலைவாணியின் அருளும் உடன்சேருமென்றும் அதனால் அவனுக்கு ஆலயமெழுப்ப உலகோர் முனைதல் அவசியமென்றும் அறுதியிடப்படும் படலம்.
அயன்மனம் காழ்ப்பற்று அமைந்த தெனவே
வியனுலகும் பாரும் விளக்க – முயலாது
விட்டது குற்றமாம் வீணே அவன் இழிந்து
கெட்டதாய்க் கூறும் உலகே ! 97
உலகு படைக்க உணர்ந்தோன் தனக்கே
அலகுநீங்க ஐந்தலை ஆகா – நிலவுதலைத்
தந்த சடைநீரன் தேமன்றல் முன்னின்றுப்
பந்தரில் ஆற்றியது பண்பு ! 98
பண்பு முறைதகர்ந்த பூங்காமனை யெரித்தச்
சண்முகன் அய்யனின் சார்பிலயன் – பின்புவர்
மீனாகி மாண்டவன் மன்றலைச் செய்துவைப்
பானாகி நின்றதும் பண்பு ! 99
பண்பா லுயர்ந்தும் பழியால் விதிசெயும்
வன்பாங்கு அயனுக்கு வேறுண்டோ ? – அன்பான
நாரதன் மாறனென ஞாலமுழல் சுற்றமாய்ப்
போரவிடச் செய்தது பார் ! 100
பார்நாதன் ஏந்தியதும், பூவினைத் தூண்டியதும்,
பேர்மணம் கொண்டதும், பேர்ந்திட – ஊர்வதும்
வேதத்தைக் கையினில் வன்பொய் யுரைத்திட
மாதங்கி புள்ளன்ன மாம் ! 101
புள்ளன்னம் ஏறிப் புவனம் படைத்திடும்
வெள்ளை மரையினில் வீற்றிருக்கும் – வள்ளலை
வான்மேகம் போல வரமழை பெய்வோனை
நான்மேவ வந்தது இந்நாள் ! 102
இந்நாள் முதலாக ஈசனைப்போல் மாலைப்போல்
எந்நாளும் போற்றியே ஏற்றிடுமின்; – செந்நாவாள்
நாதனை நெஞ்சில் நினைத்திடுமின்; உள்ளத்து
வேதனை நீங்கும் விரைந்து ! 103
நீங்கும் விரைந்துவளர் நோயும் மதிமருளும்;
தேங்கும் அருள்ஞானம் தெங்குநீராய்ப் ; – பாங்கு
பெறும்புகழ் சேரும்; புலமடந்தை கேள்வன்
பெரும்புகழ் பாடிடும் போது ! 104
போதெலாம் பாடியபின் போந்து திருப்பட்டூர்
ஓதிமனைச் சேர்மின் ; உகந்தவன் - தீதாய்ப்
படைத்த உயிர்களின் பல்விதி சீர்செய்தல்
கடைத்தேறச் செய்யும் குணம் ! 105
குணக்குன்றினைத் தொழக் கூர்மதி சேரும்
கணக்கறிவீர் ; வாணி குழைந்து – கணவனைப்
போற்றி வழிபடுவார் பூமனம் பொங்கிட
ஆற்றும் அறிவு அருள்வா ளாம் ! 106
வாளா யிருத்தல் விரிஞ்சன் புகழ்பாடாது
ஆளாய்ப் பிறந்தது அவமேயாம் – நாளான
போதும், திருக்கோயில் போதற்கு அமைத்திட
யாதும் புரிந்திடுவீர் இங்கு ! 107
இங்குஇப் புவியினில் ஈசனும் மாலவனும்
தங்குமனத் தெய்வமாய்த் தாம்விளங்கச் – சங்கமித்துச்
சன்னதிக் கோயிலின்றிச் சாற்றும் துதிகளின்றி
மன்னுயிர் காப்பான் நான்முகன் !! 108
நான்முகன் நூற்றந்தாதி முற்றும்
நூற்பயன்
நான்முக நூற்றந்தாதி நித்தம் நவில்வோர்க்கு
நான்மறை யுட்பொருளும் நேர்த்தியாய்த் – தேன்கலந்த
கன்னலாய்த் தித்திக்கும்; கச்சிநகர் வில்லழகன்
மின்ன அருள்வான் நான்முகன் !
விகாரி ஆண்டு சித்திரைத் திங்கள் கச்சி வில்லழகன்
நூல் படைத்தோன்