நான்முகன் நூற்றந்தாதி
பாயிரப் பாடல்
மும்மூர்த்தியுள் முதல் மூர்த்திக் கொருதுதி
தம்மால் தரப்படாத் தாரணியில் – மெய்ம்மைப்
புலவோர் தமிழ்பாடப் புல்லுருவி யெந்நாத்
தலமானது விந்தை தான் !
நூல்
1. அறிமுகப் படலம்
படைப்பு நிலை பற்றியும் ஐம்பூதமென்னும் வானம், காற்று, தீ, நீர், நிலம் ஆகியவற்றைக் கொண்டு மறைகலையான பஞ்சீகரணக் கலப்பினால் நான்முகன் அகில புவனங்களைப் படைக்கும் விதமும், அன்னை கலைவாணி அதில் கணவனுக்கு உதவும் பாங்கினையும் விளக்கும் படலம்.
நான்முகனை நாரா யணன்படைத்தான் நான்முகனும்
தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான் – யான்முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ்பொருளைச்
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து ! 1
தேர்ந்த மறைகலையால் தெள்ளிய ஐம்பூதம்
சேர்ந்த இயற்கைப் பஞ்சீகரணஞ் - சார்ந்த
படைப்பாம் தொழில்செய் பிரமன் மலர்த்தாள்
அடைவாம் சரணம் அறி ! 2
அறிந்தறிந்து வேதம் அயன்திரு நாமம்
செறிந்ததோர் திண்ணிய சொல்லால் – சிறந்தே
விளங்கப் பிரமனென்று வாழ்த்திப் புகன்று
களங்கம் தவிர்த்தது காண் ! 3
காணுலகம் யாவையும் கட்புலம் நீங்கிய
சேணுலகும் விஞ்சையர் சூழும்பர் – தாணுவின்
வெள்ளி மலையதுவும் வேற்றுலகு பற்பலவும்
அள்ளிப் படைத்தான் அயன் ! 4
அயனின் மணவாட்டி ஆய்கலா வல்லிப்
பயன்மிகு காந்தன் பணியில் – வியனுலகின்
பல்லுயிர் வாழப் புகுத்தும் மதிநுட்பம்
சொல்ல முடியாச் சுகம் ! 5