இது அடிமுடி தேடிய புராணக்கதை. சைவ நெறிப்படி நான்முகனார் தன்னை உயர்ந்தவராக எண்ணியதால் திருமாலுடன் விளைந்த சர்ச்சையில் சிவனாரின் திருவடியையோ திருமுடியையோ முதலில் காண்பவரே உயர்ந்தவர் என்று வரையறுத்துக் கொண்டு போட்டியில் இறங்கினர். திருமால் பன்றியாகி சிவனின் திருவடிகளைப் பார்க்கப் புறப்பட, அயனோ அன்னத்தின் மீதமர்ந்து திருமுடியைப் பார்க்க மேலே பறந்து சென்றார். எவ்வளவு உயரப் பறந்தாலும் சிவனின் திருமுடி காண முடியாதபடி வளர்ந்து கொண்டே இருந்ததால், வழியில் சிவன் திருமுடியினின்றும் உதிர்ந்த தாழம்பூ ஒன்றை, தாம் சிவனின் திருமுடியைக் கண்டதற்குப் பொய்சாட்சி சொல்ல வைத்தார் நான்முகன். அதன்பொருட்டு உலகெங்கும் பிரமனுக்கு ஆலயம் இல்லாமற் போகட்டும் என்றும் தாழம்மலர் பூசைகளுக்கு உகந்ததன்று என்றும் சாபங்கள் ஏற்பட்டன. இது, கடவுளராக இருப்பினும் பொய்ம்மை தீராத் துன்பத்திற்குள்ளாக்கும் என்ற தத்துவத்தை உலகிற்கு நிலைநாட்ட, நான்முகனே நிகழ்த்திய நாடகமென்பதை விளக்கும் படலம்.
சுகம்தேடும் மன்னுயிர்க்காய்ச் சூழ்பழி கொண்டே
அகம்பொலிய நின்றான் அயனும் – பகவானே
பொய்யென்று உரைத்திடிற் பொல்லாங்கு சூழ்வது
மெய்யென்று காட்ட முனைந்து ! 6
முனைப்பில் நிலைநின்று மூவுலகின்கண்
நினைத்துப் படைத்த நியம – வினைப்பயன்
திண்ணமாய்ச் சேர்ந்திடும் தன்மை நிலைத்திடும்
வண்ணமாய்ச் செய்தான் விதி ! 7
விதிசெய்வோன் தந்தையை வென்றிட யெண்ணி
மதிசடை யானின் முடியை – அதிவிரை
வாகத்தான் காண வகையுளதென்று உமை
பாகத்தான் மேற்பறந்தான் பாய்ந்து ! 8
பாய்ந்து கடந்தே பலஅண்ட காலமும்
தேய்ந்து கழியத் திருமுடி – ஓய்ந்திடாது
ஊன்றிவளர்தல் கண்டு உலைந்தயன் மேனோக்கத்
தோன்றியதோர் தாழம்பூ தான் ! 9
தான்செய் விதியுந்தத் தாழம் மலரைப்பொய்
தீஞ்சொற் குகைத்த திசைமுகனைக் – கூஞ்சசியோன்
ஆலயம் அற்றவனாய் ஆகச் சபித்ததும்
போலியாய் நாடகம் பூண்டு ! 10
பூண்டசிறு நாடகம் பொய்யாமை மேன்மையைத்
தூண்ட என்றாலும், தொழப்படா – ஆண்டவனாய்
ஆலயம் இல்லா அவலத்தை ஏற்றானாம்
கோல விதிசெய் கலை ! 11