நான்முகனே தரையிறங்கி வந்து சைவ வைணவத் திருக்கோயில்களில் மிகப்பெரிய திருவிழாக்கள் நடத்துவதாக அறுசமய ஆகமங்களில் வரையப் பட்டிருப்பதால் அதுபற்றிக் கூறும் படலமிது. அரக்கர்கள் அபரிமிதமாகத் தலைகனக்கும் அளவிற்கு வரமழை பொழிவதும் அவற்றின் விளைவுகளுக்குரிய விதியைத் தீர்மானிப்பதும் அயனின் இல்லாள் கலைவாணியின் கணவனின் பணிக்குதவும் பாங்கும் கூட பேசப்படுகிறது.
செய்வது பாங்காய்ச் செகப்படைப்பாம்; அயன்
துய்வதும் அன்னத்தின் தூவியிலாம்; – பெய்வது
வேட்டலில் கேட்ட வரமழையாம்; புய்ததணி
பூட்டுசிரம் ஈசன் புகுந்து ! 59
புகுந்ததும், வேள்வி புனைந்ததும், இல்லாள்
வெகுண்டதும், சாபம் விதித்தது – அகன்றதும்
தாமரையாம் புட்கரத்தே மணம் செய்ததால்
தூமனத்தாய் மங்கையால் தான் ! 60
தானே விதிசெய்யத் தானே, வரமளித்
தானே, அரக்கர் தலைகனக்கத் – தானே,
சதமகன் தானே சதிரிழந் தானே
சதுமுகன் தானேசெய் சித்து ! 61
சித்தால் நினைமின் சரோருகனைத் திண்ணியச்
சத்தால் அடைமினீர்ச் சத்திய – வித்தான
பேருல கானந்தம் பெரும்பத்தி நல்கிடும்
ஓருஞானம் மெய்யென்று உணர் ! 62
உணரும் நுழைபுலம் உள்ளார்ந் தளிக்கக்
கணவன் விதிசெய் கலைக்குத் – துணைவியள்
மெச்சி நமக்குள் முகிழ்விக்கும் பேரின்பம்
சச்சிதா னந்தமெனச் சாற்று ! 63
சாற்றும் மரைமாலை சாற்று மணிதுகில்
சாற்றுந் துதிப்பாடல், சேர்ந்துநமைக் – கூற்றின்
மருங்கே விடாமல் மறைப்ப ; அயனார்க்கு
ஒருங்கே வழிபடாமைக்கு ஒல்கு ! 64
ஒல்காப் புகழுடன் ஓங்குபெருஞ் சீர்தரும்
பல்வேறு செல்வங்கள் பாங்குறக் – கொள்வீர்
அருமறை நாதனை ஆழ்மனத்தில் தைத்துப்
பெருநாடு அடைவதே பேறு ! 65
பெருநாடு அடைவதின் பேற்றினைக் காணத்
திருமால் அழகினைத் தீரப் – பருகாதத்
தேவர் அயனின் தலைமையிற் கூடுவர்
வீவறச் செய்ய விழவு ! 66
செய்ய விழவினைச் சந்திர சேகரற்கும்
நெய்யை அவிசிடா நேர்வேள்விச் – செய்வர்
வடிவழகு மின்ன விடையமரும் ஈசன்
கடியழகு வானோர்க்கு உகப்பு ! 67
வானோர்க்கு உகப்பு விளங்கிடுபோல் பத்தர்க்காய்த்
தானோர் நெறியால் திசைமுகனும் – ஏனையரும்
பாரடைந்து கோயில் பிரம்மோச் சவமென்று
நேரிடையாச் செய்வர் நிறைந்து ! 68
நிறைந்த பரம்பொருளின் நீர்மை உலகில்
மறைந்திடா வண்ணம் மனத்துள் – உறைந்திட
வானவரைக் கொண்டு விழவு நடத்துபவன்
மானவரைக் காக்கு மயன் ! 69
காக்கும் அயனின் கழலடியைப் பற்றுதலும்
தாக்கிடும் பாவந் தனைத்துதியால் – நீக்குதலும்
நல்வழித் தேறுதலும், நாமகள் தந்ததன்றி
அல்வழி ஏதுமில்லை அங்கு ! 70
அங்கந்திப் போதில் அரக்கன் அழியமால்
சிங்கமாய்த் தோன்றும் செறிபுலம் – பொங்க
வரமளித்த ஆரணனை வண்டமிழால் வேண்டிக்
கரங்குவிப்பாய் நெஞ்சே கரைந்து ! 71