உலக நன்மையின் பொருட்டு புட்கரத்தில் இந்திராதி தேவரும் முனிவரும் உடனேக நான்முகன் ஒரு மாபெரும் வேள்வி நடத்த முற்பட, வேள்விக்குக் கலைவாணி வருவதற்குத் தாமதமாகுவதும் வேறொரு பெண்ணைக் கொண்டு வேள்வியை நான்முகன் முடிக்க முனைவதும் அதனால் வாணி சினந்து அனைவரையும் சபித்துவிட்டு அமைதி தேடித் தென்திசை சென்று யோகத்தில் அமர்ந்துவிடுவதும் மனைவியைத் தேடி அயனார் அலமருகின்றதும் கூறும் படலம்.
ஏதவனைப் போற்றாமை ஏதவனை ஓராமை
ஏதவனை நெஞ்சத்தில் ஏற்றாமை – ஏதவனைப்
பூக்கள் நிரைகொண்டுப் பூசனை செய்யாமை
மாக்களே ஆனோம் மறந்து ! 25
மறந்தால் மனைவியை மங்கலம் போகும்
சிறந்ததோர் வேட்டலும் சீர்மை – துறந்திடும்
என்னும் நிலையை எவரும் உணர அயன்
முன்னர் முனைந்தான் முயன்று ! 26
முயன்றான் பெருவேள்வி மூவுலகு வாழச்
சயந்தனின் தாதையைச் சார்ந்து – நயந்தான்
அனைத்துச் சுரரை அணிபுட் கரத்தின்
வனத்திடைச் சேர்த்த அயன் ! 27
அயனின் அழைப்பை அடிபணிந் தேற்றுப்
புயத்தார்ப் புரந்தரனும் போக – வியனுலகம்
மாட்சி பெறத்தேவர் மாவேள்வி ஆற்றிய
காட்சி விரித்தற் கரிது ! 28
அரிதான அவ்வேள்வி ஆற்றத் துவங்க
விரிதாமரை யானும் வாணி – துரிதாய்
வராததினாற் கால விரயத்தை வெல்ல
நிராகரித்தான் வேள்வியி னின்று ! 29
நின்றிட்ட வேள்வி நிறைவு பெறுநோக்கில்
சென்றங்குத் தேர்ந்த சிலையொருத்தி – மன்றத்தின்
பந்தற்கீழ்ப் போதன் பணித்தவாறு இல்லாளாய்
இந்திரன் சேர்த்தான் இசைந்து ! 30
இசைந்து திசைமுகன் இட்ட பணியை
விசைவுறச் செய்தும் விதியின் – நசையறு
வல்வினை சூழ்ந்தது வாணி வரவினால்
நல்வினைக் கேது நலிவு ! 31
நலிவினைப் பெற்றனர் நாமகள் சீறிப்
புலியெனப் பாய்ந்ததால்; புல்லர் – பொலிவு
கெடுகவென்று இக்கணம் கேடுசூழ்ச் சாபம்
கடுகி விடுத்தாள் கசிந்து ! 32
கசிந்தனள் கண்ணீர், கலைமகள் நெஞ்சம்
ஒசிந்தனள்; தென்றிசையில் ஊர்ந்து – முசிந்தனள்
புட்கரம் நீங்கினள், பூம்புனற் கூத்தனூர்
உட்புகும் எண்ணம் உகந்து ! 33
உகந்து சதுமுகனின் உன்னத வேள்விப்
புகுந்த காயத்திரி பூவை – தகுந்த
பரிகாரம் தேடித்தான் பாமகளின் சாபம்
சரியாக மாற்றியது சால்பு ! 34
மாற்றிய சால்பின் மகிமையால் ஈசனுரு
ஆற்றும் இலிங்கமாய் ஆலயம் – வீற்றிடவும்
வாசவன் செல்வம் வறண்டபின் கூடுமெனாத்
தேசுடைச் சாவித் திரி ! 35