தான் திருமணம் புரிந்து இல்லறத்தை மக்களுக்கு எடுத்துரைக்கக், கலைவாணியைப் படைப்பதும் அவள்பால்
ஈர்ப்பு கொள்ளும் நிகழ்வுகள் நடப்பதும் தேவர்கள் எதிர்ப்பதும் இறுதியில் கலைவாணியே திருமணத்திற்கு
உடன்பட்டு மனமுவந்து மன்றல் காண்பதும் ஆகியவை பேசப்படுகின்றன.
கலைகொஞ்சும் பற்பலக் கண்விதுப்பு சிந்தும்
சிலைமங்கை யாருமவன் சிந்தை – நிலைதங்கி
ஈர்த்தறியான் நாமகளை ஈன்ற திருநாளில்
கோர்த்தது அயன்நெஞ்சில் கோது ! 12
கோது புகுந்ததொரு கோலச் சுழற்சியால்
பேதுறு நெஞ்சம் பொலிவிழந்து – மாதழகை
மேவியவன் ஆழ்ந்தே மணம்புரியச் சிந்தித்தான்
தீவினை நல்வினைத் தேவு ! 13
தேவான வர்க்கும் தெளிவின்றிப் போனது
மாவான மண்டலம் முற்றிலும் – நாவாளும்
வாணியின் மன்றல் விரிஞ்சனுடன் என்பதில்நீர்
வேணியனுக்கு இல்லை வேட்பு ! 14
வேட்பின் எதிரொலி வேட்கைக் கனலாக
வாட்புல நாயகி வாணியும் – மீட்பினைக்
காட்டிலும் கஞ்சரன் கைக்கிளை நீக்கிடக்
காட்டினள் ஆர்வம் கனிந்து ! 15
கனிந்த கலாவல்லி கொண்ட முடிவாம்
முனைந்த அயனை முழுதாய்ச் – சினந்திடாது
ஈன்ற உயிரிலன்றி இல்லாள் இலையென்னும்
ஊன்று நிலைமை உணர்ந்து ! 16
நிலைமை உணர்ந்தயன் நெஞ்சிற் சுரந்த
கலைமகள் கண்ணுறு காதல் – வலைவிழுந்து
சூழ்த்திசைக்கோர் சிரம்சேர்த்துப் புனற்றலையற்கு
ஆழ்சின மூட்டினன் ஆர்த்து ! 17
ஆர்த்து வளர்த்திட்ட ஐந்தலையில் ஒன்றனைப்
பேர்த்து விடையோன் பிடுங்கக்கை – சேர்ந்துத்
திருவோடாய் ஒட்டத் திருமா தழித்தாள்
தருக்கோட்டு கஞ்சன் தலை ! 18
தலைவனாய் ஏற்றாள் தமனியன் தன்னைக்
கலைவாணி ; தேவர் கணங்கள் – குலைவுற்று
நொந்தனரால் ; மன்றலை நேர்ந்தான் மிடாரியும்
புந்தியாள் பாதை புரிந்து !
19
பாதை புரிந்து படைப்பின் மதிவளர்க்கும்
மேதை யிவளென மேதினியில் – வேதங்கள்
காட்டும் கலைமகளைக் கல்விக்கு அணிகலனாய்ப்
பூட்டும் புலம்கொள் புவி ! 20
புவிக்கு வராகப் பொருகோட்டில் இடம்
குவிக்கும் திருவுக்கு உரமாம் – சிவன்சென்னி
கங்கைக்கு இடமாம் கமலத்தோன் தந்த இடம்
நங்கைக்கு நாலிலொரு நா ! 21
நாலிலொரு நாவால் நவிலாது பொய்யினை
வேலியிட்டு, உள்ளத்து வேட்கையைக் - கோலி
ஒழிக்கும் புலமிருந்தும் ஒண்ணாது, வேடம்
செழிக்க நடித்தவன் தாள் சேர் ! 22
சேரும் மிளிர்வினால் செய்தவத் திண்மையால்
யாரும் எதிர்க்கவே யஞ்சிடும் – பேரவுணர்
கேட்ட வரமனைத்தும் கேள்வியறத் தந்திடுதல்
பாட்டன் பரிந்தளிக்கும் பாங்கு ! 23
அளிக்கும் பாங்கினில் ஆழ்ந்து வரங்கள்
தெளிவுடன் புன்மை துவளக் – களியுலகே
உண்ணிலவு தன்மை உகக்கும் பிதாமகனை
எண்ணமுற ஏற்றாதது ஏது ! 24