பாயிரம்
கமலத் துறைவாள் கலையுடுப்பாள் வேதங்
கமழு மிசைப்பாள் கொலுவி - லமர்வாள்
வெளிர்வெள்ளை கைகள்தாம் வீணை நவநாள்
ஒளிரூண னென்மே லுகப்பு !
நூல்
வெண்டா மரைமலராள் வீணையாம் கேலிகலை
கொண்டாள் திருக்கையிற் கோதிலாப் - பண்டான
வேதங்கள் தாமோதும் வாணீசன் நாவுறையும்
மாதங்கி பேர்சொல் மகிழ்ந்து ! 1
மகிழும் மனத்தனாய் மாஞானம் பெற்று
முகிழு மறிவுடன் முப்பாழ் - நிகழும்
வறுநிலம் வாழ்ந்தாலும் வாணியின் சீர்மை
செறிநிலந் தானறியச் செப்பு ! 2
செப்புநல் ஞானஞ் செழித்து விளங்குதல்
முப்பிறவி நோற்ற முதுபயனே - தப்பாது
வந்தனை செய்திடவும் வாணி வளமருள்வாள்
சிந்தனை மீதிட்டுச் சாற்று ! 3
சாற்றியே நால்வேதம் சந்ததம் வேதசனும்
ஆற்றப் படைத்தா னவனியை ; - போற்று
மறைகள் களவுபட வாணிமதி யூர
மறைமீட்டான் மீனாகி மால் ! 4
மாலினால் பெற்ற மறையனைத்தும் நாமோத
நூலினார் வல்கியர் நூற்றுக்கும் - மேலிட்டுப்
பேணிநாற் கற்பமும் பேறடையத் தந்தது
வாணியாள் செய்த வருள் ! 5
அருள்விளங்கும் கம்ப னழகுதுமிச் சொல்லின்
பொருள்விளங்க வாணி புலவோர் - மருள்கெட
தானே விழைந்துத் தயிர்கடைந்த நீர்மையைத்
தேனேர்த் தமிழால் துதி ! 6
துதிபெய் மறைபொருள் தானறியா னென்று
விதியைச் சிறையிட்டான் வேலன் - மதிவாணி
நாவிருப்பு மாணவ நான்முகனைக் காக்கவிலை
பூவிருப்போன் கெட்டான் புலம் ! 7
புலத்தியன் பேரன் புகழ்க்கும்ப கர்ணன்
பலத்தினால் பல்லுயிர் போக்கிச் - செலவுய்த்து
நித்தியம் தான்நினைத்து நித்திரை வேண்டியது
வித்தகச் சாரதா வால் ! 8
வாலிக்குச் சாபமிட்ட வற்கலை மாதங்கர்
சூலிக் கவிசொரியும் சூழ்வேள்வி - யாலொரு
மாதவஞ் செய்திடநா மங்கை யவர்மகளாய்ப்
போதிறங்கி மண்வந்த போது ! 9
போதன் பதிகங்கள் போற்றிச் சமைத்தவன்
வேதன் துணைகலை வாணியின் - பாதம்
வழிபட்டே வாழ்ந்தும் வறுமையை யேற்றும்
இழியவில்லை தன்னிலை யில் ! 10
தன்னிலை தாழ்ந்ததும் தானே அடுமனையின்
முன்னிலை நேர்ந்ததும் முற்றிய - கன்னலாம்
போதனின் பாகவதம் போந்த அமுதினை
வேதமகள் தான்சுவைக்க வே ! 11
வேட்டலாற் கிட்டாது வெண்கமலத் தேவியருள்
நாட்டமுடன் வேண்டிநாம் நைந்துருகிக் – கேட்பின்
விதங்களற ஞானம் விளையத் தருவாள்
மதங்கமுனி ஈன்ற மகள் ! 12
ஈன்ற மகளின் இனியகாந்தன் ஈசனுதல்
கான்ற கனலாற் கரியாக – சான்ற
தலையெழுத்து நாமகளே தான்மனம் நோகும்
கொலையெழுத் தானது கோது ! 13
கோதிலாக் காமவேளைக் கோல வெழில்ரதி
ஏதிலாக் காதலா லேற்கவும் - வேதமகள்
மன்றலைத் தான்முடித்து மாதவன் பாட்டனில்லை
என்றுநிலை மாற்றியதும் ஏன் ? 14
மாற்றியது மேன்மை மழுங்கியதால் வென்றது
கூற்றுவனோ ? தாழம்பூ கூடியுடன் - ஆற்றியபொய்
வாலயனார் தம்மை வணங்குந் தகவழித்து
ஆலயம் நீக்கிற் றறி ! 15
அறிவின் மிகநுட்ப ஐங்கரணஞ் செய்வோன்
மறியின் மகளன்ன மங்கைச் – செறிவில்
விழைந்து திசைக்கோர் வனைச்சிரம் வார்த்தே
இழைத்தான் சிறுமை இயைந்து ! 16
இயைந்தே யவனை இயன்மகள் ஏற்றாள்
வயங்கு நுழைபுலத்தின் வாகால் ; – பயந்த
உயிர்யாவும் மக்களெனின் உற்றதுணை யற்றே
அயர்வாழி ஆழ்வான் அயன் ! 17
அயனைத் துதிப்பார்க்கும் ஆய்கலா வல்லி
துயரைத் துணித்திடும் தூயாள் – வியக்கும்
அறிவினைத் தூண்டிநல் ஆற்றல் பெருக்கிச்
செறிவினை ஈவாளாம் சேர்த்து ! 18
சேர்த்தெனை வாளால் செகுத்தே யறுத்தாலும்
ஆர்த்தவள் காதலுக்கு அற்றேநான் – தீர்வேன்
அலங்கலிடு பஞ்சைக்கும் அஃகாத் துணையாய்த்
துலங்கும் புலவோர் திரு ! 19
புலவோர் திருவாய்ப் புகுந்து தமிழ்ச்சொல்
பலவோர்ந் தடைமழையாய்ப் பல்கி – நலமார்
இருநில மன்பதை இன்பமாய்த்தாம் வாழப்
பெருநிலஞ் சேர்ந்தாள் பெயர்ந்து ! 20
தாள்பெயர்ந்து அன்னம் தனைவிட் டவனியின்
வாள்புல நுண்மதி வார்த்திடும் – நீள்புகழ்ச்
செஞ்சொல் கவிஞர்தம் சேணுயர்ப் பூமலர்
நெஞ்சி லமர்ந்தாள் நெகிழ்ந்து ! 21
நெகிழ்ந்த மனத்தளாய் நேருங்கா தன்மை
முகிழ்ந்த அறிவுசால் முத்தர் – மகிழவே
கூத்தனூர்ச் சேர்ந்து குறைதீர்க்க நின்றாளை
ஆத்தனாய் வாழ்ந்தேன் அடைந்து ! 22
தேனடைக் கூட்டினைத் தேடா எறும்புபோல்
நானடைந் துன்னாது நிற்றலால் – தானடைந்து
என்னாவைத் தாமே தமைப்பாடி என்னையும்
துன்னாப் புலவனாய்ச்சேர்த் தாள் ! 23
தாளிணையாம் பட்டுத் துகிலுடுப்பாள் தேனிசை
மீளிமைதான் சாற்று மிளிரிலாசப் – போளியாம்
தான்கொள் உணவதுவே தன்வீணை மீட்டிட
மீன்வெள்ளி வெண்டா மரை ! 24
நூற்பயன்
அன்னை கலைவாணி ஆரருள் சாற்றிடும்
இன்னூ லறுனான் கிசைப்போர்க்கு – மின்னும்
நலம்விழைத்து நற்செல்வம் நன்களிப்பாள் நீவிர்
புலம்தழைத்துக் கொண்மின் புரிந்து !! 25
கலைவாணி அந்தாதி முற்றும்
அருஞ்சொற்பொருள்
பாயிரப்பாடல்
கலை – துகில் ; நவநாள் – ஒன்பது நாள் ;
ஊணன் – மிகத்தின்று உடம்பை வளர்ப்பவன்
பொருள்கோள்
வெளிர்கமலத் துறைவாள்; வெள்ளை கலையுடுப்பாள்; கைகள்தாம் வேதங்கமழும்; வீணை இசைப்பாள்; நவநாள் கொலுவிலமர்வாள்; ஒளிரூணன் என்மேல் உகப்பு !
1. கேலிகலை – கலைவாணி கைதவழும் வீணையின் பெயர் ; பண்டான - பழமையான
மாதங்கி - மதங்க முனிவர் புதல்வி
2. முப்பாழ் – வெய்யில், மழை, கீழ்மக்கள் என 3 வகையான பாழ்
வறுநிலம் – செழிப்பற்ற நிலம் ; செறிநிலம் – திண்ணிய நிலம்
3. வந்தனை – துதி
4. சந்ததம் – எப்போதும் ; வேதசன் – நான்முகன் ; மால் – திருமால் ;
5. வல்கியர் – கிருட்டின யசுர்வேதம் செய்த யக்ஞவல்கியர் ஈறான அந்தணர் ;
நூலினார் – முப்புரி நூலணிந்த வேதநூல் செய்த அந்தணர் ; நாற்கற்பம் – நான்கு கல்பகாலமாகிய 432 கோடி நிலவுலக வருடங்கள்
6. மருள் – அறியாமை ; நீர்மை - எளிமை
7. விதி – நான்முகன் ; வேலன் – முருகன் ; புலம் – நுண்ணறிவு
8. புலத்தியன் – இராவணன் தந்தையான விச்சிரவசுவின் தந்தை ; வித்தகம் – சிறந்த தேர்ச்சி ; நித்தியம் – மரணமிலாப் பெருவாழ்வு ; நித்திரை - தூக்கம்
9. வற்கலை – முனிவரணியும் மரவுரி ; சூலி – சிவன் ;
அவிசு – வேள்வித்தீயில் தேவர்களுக்கு வழங்கப்படும் உணவு ;
10. போதன் – போதண்ணா என்ற தெலுங்குமொழி இராமாயணமியற்றிய புலவன்
11. அடுமனை – சமையலறை ; கன்னல் – கரும்புச்சாறு
12. வேட்டல் – வேள்வி செய்தல் ; விதங்களற – எண்ணிலா விதமான
13. காந்தன் – கணவன் ; நுதல் – நெற்றி ; கான்ற – வெளிப்பட்ட
14. காமவேள் – மன்மதன் ; மன்றல் – திருமணம்
15. வாலயன் – பிரம்மன் ;
16. ஐங்கரணம் – ஐம்பூதங்கள் விகிதச் சேர்க்கை கொண்டு எண்ணற்ற உயிரினங்களைப் படைக்கும் பஞ்சீகரணம் எனப்படும் படைப்புத்தொழில் ;
17. இயன்மகள் – கலைமகள் ; வயங்கு – மிகுதியான ; அயர்வாழி – தளர்ச்சிக்கடல்
18. ஆய் – தாய் ; செறிவு - நிறைவு
19. செகுத்து – வெட்டி ; அலங்கல் – மாலை ; பஞ்சை – வறியவன் ; அஃகா - குறையாத
20. இருநிலம் – உலகம் ; மன்பதை – உலகமக்கள்
21. சேணுயர் – மிகவுயர்ந்த
22. காதன்மை – அன்புடைமை ; முத்தர் – முற்றும் துறந்தோர் ; முகிழ்ந்த – குவிந்த, பொதிந்த ;
ஆத்தன் / ஆர்த்தன் – வேட்கையுடையவன்
23. உன்னாது – நினையாது ; துன்னா – பொருந்தாமல் சேராத
24. மீளிமை – வெற்றித்திறம் ; மீன்வெள்ளி – விண்மீன் வெள்ளி ; இலாசம் - பொரி
பொருள்கோள்
வெண்டாமரை தாளிணையாம் மீன்வெள்ளி பட்டுத் துகிலுடுக்கும் தன்வீணை மீட்டிட தேனிசை மீளிமைதான் சாற்றும் தான்கொள் உணவதுவே மிளிரிலாசப் – போளியாம்
அன்னை கலைவாணி மலர்த்தாள் போற்றி போற்றி !!