தனியன்கள்
மலர்ப்பாவை கேள்வன் மணிவயிற்றுக் கொப்பூழ்
மலர்தனில் தானுத்தித்த மூலன் – மலர்த்தாள்
வணங்குவாம் ; மார்கழியில் வானோர்தம் வேள்விக் (கு)
இணங்குவோம் இன்றிங் கிசைந்து !
முப்பது நாளும் முழுதாய் விரதங்கள்
தப்பா திருக்கும் தவமியற்றி – துப்பா !
திருப்பட்டூர் வேதா ! தலையெழுத்தை மாற்றென் (று)
அருத்தித்தால் ஆக்கும் அயன் !
நூல்
மார்கழித் திங்கள் மதிநிறைக்கும் பொன்னாளாம்,
நீராடப் போந்திடுவீர் நிறைநோன்பு நோற்குவீர் !
சீர்பல்கு திருப்பட்டூர் செல்வக் குழந்தைகாள் !
கூர்சூலக் கொடுந்தொழிலன் கந்தவேள் தாதையன்
நீர்சேர்ந்த வேணியன் நிறைகோயில் வீற்றிருக்கும்
பார்நாதன் தனைக்காணும் பாங்கினால் அகமகிழ்வீர் !
தீர்வவனே எனவானோர் திக்கற்றுக் கிடந்திறங்கிச்
சேர்ந்தனர் அயனடியைச் செப்பேலோ ரெம்பாவாய் ! 1
சுந்தரத் தோளுடையன் சூழுலகு யாவையும்
அந்தரமும் உயிர்களும் அவையல்லாப் பிறவும்
என்திறத்துப் படைத்தான் என மறைகளும் அறியா ;
அந்தோ ! எந்தமக்காகி அடிமுடி தேடலிலோர்
செந்தாழ மலர்தனைச் சாட்சியாய் நிறுத்திய
நந்தா விளக்கே ! நின் நாடகம் புரிதலொட்டோம் ;
அந்தாமத் தின்பம் அடைவதோர் ஆசையினால்
வந்தோம் பணிந்திட வாழ்த்தேலோ ரெம்பாவாய் ! 2
சந்தனம் அகிற்புகைச் சாந்தும் மணம்வீசும்
வந்தெதிர் கொள்ளும் வேதியர் மறையொலியும்
விந்தைசேர் பட்டூரில் விழுமியதோர் உண்மை,
மந்திரத்தால் ஒழியாது வவ்விய மாபாவம் ;
கந்தமலர் வாழ்கின்ற கடவுளே நம்காப்பென
வந்திங்கு நோற்றுநும் விதிமாற்றக் கேண்மின் ;
செந்திறத்த தமிழோசைச் செவியாரப் பாடுமின்,
அந்தமாம் பாவமெலாம் அறியேலோ ரெம்பாவாய் ! 3
ஓங்கார மந்திரத்தின் உட்பொருள் மனத்துள்ளி
நீங்காமல் அயனார்க்கு நோற்கப் புகுவீரால் ;
தேங்காது வளர்புந்தித் தெய்வக் கலைவாணி
பாங்காக உட்புகுந்துப் பெருஞானம் அளிக்கும் ;
ஆங்கன்று இரணியன் ஆகமதைப் பிளந்துயிரை
வாங்கிடு சிங்கமாய் வாணி புலம்புகுந்ததால்
தீங்கினைப் பொன்றிடும் திறல்வழி கண்டான்
வேங்கடவன் என்றே விளக்கேலோ ரெம்பாவாய் ! 4
பரம்பொருளை உணரப் புகுந்திடும் உயிர்காள் !
சிரம்வணங்கிக் காண்மின், சென்றுநீர் வடபுட்
கரத்தே வீற்றிருக்கும் கமலத்துறை நாயகனை ;
புறமகம் நனிசேரப் புலமார்ந்து நோற்கவும்
வரமருள்வான் எண்கணன் வாரிதியும் ஈடோ ?
மறந்தும் வேற்றுமையால் மார்க்கம் பிறழாது
பிறந்த பயனடையப் பற்றிடுவீர் மற்றெலாம்
துறந்த நிலைகாணத் தூண்டேலோ ரெம்பாவாய் ! 5
பிரமனே பரமமெனப் புலம்விளைந்த நெறியே
சரமமென்று அறியீர் ! சூழ்தரங்கம் அரிபுவி அந்
தரமும் மற்றுங்கால் தீநீர் தக்கன படைத்தபின்
அறமுடை நாயகன் அயனாய் வெளிப்பட்டுட்
கரவுடை ஒலிமறை கமண்டலத் தோர்க்குமே
விரவித் தந்தமை விளங்க மிகக் கேட்டுமோ
சிரத்தை இன்றியே சிவனரியைப் போற்றுவீர் ?
உறக்கம் நீங்கி உணர்மினேலோ ரெம்பாவாய் ! 6
நல்லவர் நனிவாழ்ந்திட நயந்த நான்மறைகள்
புல்லர்தம்கைப் புகுந்து போனதாற் கலியிடை
அல்லவற் றிலெல்லாம் அறமுந் தழைப்பதாய்ச்
சொல்லத் துணிதலும் சரியாமோ ? அரனரியே
வல்லரெனக் காட்டவிலை வேதமுப நிடதமும் ;
மெல்லநும் மனம்பற்றி மமதையினை நீக்கிடும்
வல்லமை புகுங்காண் ! வந்து நோற்பீர் இதன்
எல்லையும் எளிதன்று எண்ணேலோ ரெம்பாவாய் ! 7
மனத்துக்கண் மாசிலனாம் மமதையை வெல்பவன்
சினத்தினை அறவே செகுத்தெறிந்துச் செல்பவன்
தினைத்துணையும் ஆசை தேக்கிடா நெஞ்சத்தன்
எனவொருவனை மாற்றும் இந்நோன்பு நோற்குங்கால் ;
அனைத்தும் அயனேயென்று அகமுங் குழையுங்காண் !
வினைக்கரும சிக்கலும் விலகியோட விழைவது
தனைக்காணும் அதிசயம் தப்பாமல் நடப்பதனால்
முனைவீர் முழுதாய் முன்னின்றேலோ ரெம்பாவாய் ! 8
அல்வழக்கு ஆடிடும் அணங்கைத் துயிலெழுப்பச்
சொல்வழக் காடிப்பின் சோர்ந்திடும் நெஞ்சத்தீர் !
செல்கதியைக் கண்டும் சிக்கெனப் பற்றாவிடில்
நல்வழியில் நமைநடத்த நமனுக்கும் நயமில்லை !
புல்லுக்கும் நீரிடும் பொன்பழனத்து உழவிதுவாம் ;
நெல்லூடு கயல்பாயும் நன்மருதப் பட்டூர்வாழ்
புள்ளூரும் ஓதிமனார் பூங்கழலிற் சரணநிழற்
கொள்ளத் துயிலெழாய் காணேலோ ரெம்பாவாய் ! 9
விடிந்ததுகாண் பாவாய் ! வீணே உறங்குதியோ ?
கடிமலர்த் தவிசுறை கலைவாணி கேள்வனைக் * கள்
வடிகின்ற மலர்பெய்து விரதங்கள் நோற்றார்க்கு
முடிந்த தாயினவாம் முப்பிறவித் தீவினைகள் ;
நெடித்தல் விட்டேகுதி ! நெஞ்சத்துள் பத்தியினால்
படிக்கேழில் லாதயெம் பெருமான் வனைகழலிணை
பிடித்ததும் கருமவினை பொசுங்கிடக் காண்பரே !
நொடிப்பரோ வாழ்விலவர் நோற்றேலோ ரெம்பாவாய் ! 10
துண்டவெண் பிறையன் மன்றற்குத் துணைநின்று
தெண்டிரை நீந்திடு திமிங்கிலமாகி அவன்கைக்
கொண்டு பொன்றினனைக் கொடுமுடியில் வன்னிக்கீழ்க்
கண்டுய்யப் பாவாய் நீ கதைக்காது எழுந்திராய் !
அண்டர்தம் நாயகனாய் அனைத்தும் படைத்தவன்
முண்டக மலர்கொண்டு மூதலித்த பொய்யாமை
மண்டாமற் போனதால் மந்திர மந்திர மற்றுத்
தொண்டருமற்று நின்றானைத் தொழேலோ ரெம்பாவாய் ! 11
சொல்லிலரசி நங்காய் ! சூழ்ந்தோம் உன்வாசற்கண் ;
நல்லதனை வருமிங்கு போந்தாரோ நயந்தேதான் ;
அல்லவை தாம்நீக்காய் ! அயனார்க்காகி நோற்கச்
சொல்லிய வண்ணம்யாம் சூழ்ந்தும்நீ செய்வதென் ?
முல்லைத் தலைவனிடம் முகிழ்த்தவனைக் காணவோ ?
தொல்லைப் பிரமனே தோற்றுவித்தான் திருமாலை ; உன்
வல்லமை அறிவோமே வளவளத்தலேன் எழுந்திராய் !
நல்லையென்று வந்துநிலை நாட்டேலோ ரெம்பாவாய் ! 12
சிவன்முடியை வான்தேடிச் சென்றவன் அயன் காணேடீ !
தவப்பிள்ளை கறியுகக்கும் தந்திரம் அறியானேடீ !
உவர்மீனாய்ப் பொன்றினனோ உறுவீரம் கன்றியதால் ;
பவனுடைய மன்றலது படிந்ததும்மீன் பொன்றியதால் ;
நவநீதன் மகனாகியும் நான்மறையைத் தொலைப்பதுவோ ?
தவநால்வர் தமையடையத் தொலைத்திட்ட நாடகமும்
அவனிதனில் வேதங்கள் அவதரித்ததும் அயனால்தான் ;
புவிகாக்கும் இறையெனநீ புகழேலோ ரெம்பாவாய் ! 13
ஐயங்கள் நீங்கியபின் அயனார்க்கே ஆகி நின்றாய் !
வையத்துள் தன்னலத்து வசப்படாத் தனித்தெய்வம்
பெய்யும் வரமழையைப் பெற்றிடவே தகைகொண்டாய் !
கையபூண் வளையொலிக்கக் கேலிகலை தனைமீட்டும்
துய்யாளும் துணைசெய்யத் தூங்காம லெழுந்திராய் !
கையார் நேமியன் தேவர் கண்ணுதல் அனைவரையும்
மெய்யான பிரமனவன் மேனிக்கண் காணாற்றல்
பையவே பெறநோற்கப் புகேலோ ரெம்பாவாய் ! 14
இன்னமும் உறங்குதியோ இளங்கிளியே ! கரையும்
கன்னங்கரு காக்கையொலி கேட்கச் செவியிலையோ ?
துன்னருந் தெய்வமாம் துரீயனயன் தாளணைய
நின்னருங் குடின்முற்றம் நேர்வந்து நின்றோம் காண் !
பின்னலுடை கார்க்குழலீ ! பாலுண்டு புனல்பிரிக்கும்
அன்னப்புள் தனிலேகும் அன்னை கலைவாணியாள்
இன்னருளும் சேர்ந்திட்ட இப்பிறவி அமைந்ததினை
எண்ணியிரும் பூதெய்தி ஏற்றேலோ ரெம்பாவாய் ! 15
வரைபவர் தமக்கன்றி வேறார்க்கும் சித்திரவிதி
முறைகளின் தன்மையினை முற்றுணரக் கூடுமோ ?
மரையுளான் செய்தவிதி மாற்றும் புலக்கடலின்
கரைகாணத் தேவர்க்கும் கடுகளவும் விதியிலையே !
புரைதீர்ந்த நன்மைக்காய்ப் பொய்நாடகம் ஆடியவன்
வரைமுறை யினைமீளான் வாமவாமனர் போலன்றி ;
சிறைசென்று குட்டுபட்டான் சிறுவன் விளையாட்டிலும் ;
அறம்திறம்பா அயனார்க்கே ஆகிடுவீ ரெம்பாவாய் ! 16
உத்தமத் தெய்வமாம் ஓதிமன் கோயில் நண்ணி
முத்திபதம் வேண்டியே முரல்வதுமேன் கேளீர் !
அத்திகிரி யிலொருநாள் அயன்செய்த வேள்வியில்
கத்துகடல் வண்ணனாம் கரிவரதனை ஆக்கியதும்,
உத்தரைதன் கருவுளுயிர் உகாது கணைகாத்ததும்
பத்துசிரத் தவனையோர் பகழியுள் நின்றழித்ததும்
முத்தொழிலும் செய்திறம் மூலப்பிரமன் உண்ணிலவும்
அத்திறம் கண்டேயாம் அறியேலோ ரெம்பாவாய் ! 17
செய்யதா மரையுளான் செங்கழலிணைதமை போற்றி !
வெய்யவான் கதிரெனவே வீசிடுமா தேசு போற்றி !
துய்யுநா வமர்ந்திட்ட துணையாள் வாணி போற்றி !
கையதிற் துலங்கிடு கமண்டலமக்க மாலை போற்றி !
பையவே பறந்திடு வெள்ளோதிமப் புள்ளும் போற்றி !
பொய்யின் தீங்கினைப் புவிகாணச் செய்தான் போற்றி !
உய்யுவழி அவனென்றே உணர்ந்த பின்னர் போற்றிக்
கையதனைச் சிரமேல் கூப்பேலோ ரெம்பாவாய் ! 18
முப்பத்து மூவர்க்கும் மகவேள்வியும் மன்றலும்
செப்பமுடன் முன்நின்று செய்துவக்கும் போதன்
வெப்பப் பகைதனை வேற்றுவரிடம் கண்டிடினும்
கப்பணம் வீசியமர்க் களம்கலக்க விரும்பாதான்,
துப்புடையான் இவனே தொண்டர்க்கும் இனியவன் ;
அப்புவளர் மரையிதழில் அருமறைதன் ஒலியலை
ஒப்புவித்து அவுணனதன் ஓசை கேளாதிருக்கும்
நுட்பமது கண்டானை நண்ணேலோ ரெம்பாவாய் ! 19
விதியினைத் திருத்திடும் விழைவுளோர் வம்மின்,
புதியவோர் பாதையிற் படைத்தவனை அணுகியூழ்
பதித்துள்ள நம்சஞ்சிதப் பதிவுமாற்ற முனைவோம் ;
கதிநமக்காய் விளங்கிடுங் கமலத்தோன் இதற்காகி
விதிமாற்றும் பணியேற்று விளங்குவதாற் பட்டூரில்
அதியற் புதமாய் நோற்று அவனருளை நீரடைமின் ;
சதிசெய்தும் தான்முந்துறு சாகசவூழ் மாறுவதை
மதியுணரக் கண்டிடுவீர் மலைத்தேலோ ரெம்பாவாய் ! 20
அத்தனாம் அயனார்க்கு ஆட்பட்டுநாம் நோற்றிடும்
வித்தக முறைமைகள் விளங்கமிகக் கொண்டோம் ;
சுத்தமுறப் புனலாடிச் சூடுவோம் வண்துவராடை ,
தத்தமது இல்லத்தின் தகவோர்தமை வணங்கிட்டு
நித்தமும் ஓதுமற நூலொடு அயனெட்டெழுத்தைச்
சித்தமது நிறைசெபம் சாற்றியபின் கோயில் நண்ணிச்
சத்திய உலகத்தான் சதுமுகனைத் தொழுதெழுவோம் ;
முத்திபெறக் கடுவிதி முடிந்தேலோ ரெம்பாவாய் ! 21
தித்திக்கும் அமுதமாகித் திருக்குடந்தை உறைதெய்வ
நித்திலமே ! உன் திருவடி நீழல் புகுந்தோமென்னும்
வித்தகம் கண்டவுடன்கொடு விதிதனில் இனிமைகூடும்
அத்திறம் காண்டிடும் மற்றனையோர் வியப்பரேதாம் ;
எத்திறத் தெம்மந்திரம் எங்ஙனம் விதி மாறுமென்ற
உத்தியை அறிந்திடவே உண்மைநிலை உணராமற்
பித்தமே பிடித்தலையும் பேதைகாள் ! விதிமாற்றும்
புத்தகமே அயனவனைப் படிமினேலோ ரெம்பாவாய் ! 22
விடிகதிர் ஒளிபடவே விதிர்த்தகலும் கங்குற்போல்
பொடிபட்டு வினைமாளும் பூவுளோன் நமைப்புகின் ;
துடிகைய முக்கண்ணன் துணைகொண்ட தியானமும்
நெடியவன் பாற்கடலில் நோற்குந் துயிற்கோலமும்
அடிப்படைப் பேரண்டம் ஆகியே அனைத்துட் புகுந்த
கடிபோர்ப் படையேதும் கையேந்தாப் பிரமன்றனை
வடிவிலாப் பேராற்றலாய் வகையுணர்தல் தவமாம் !
கடவுளாம் கடவுளர்க்கும் காணேலோ ரெம்பாவாய் ! 23
படையேந்து கரங்களுடைப் பற்பலத் தெய்வத்துள்
சடையனார் கைமழுவும் சூலமும், தண்பரவையுள்
விடமுறு பாந்தட்டுயில் விமலநேமி சார்ங்கமும்
தடசுனைப் புனல்நாகத் தலைவன்கை வச்சிரமும்
புடைசூழ்ந்த இமையோர்தம் படைநாயகன் வேலும்
தடையறச் சமரிட்டுத் தாக்கி யழிப்பதற்கன்றிக்
கடையர் எவருக்கும் காப்பானதோ ? ஆயுதம்
அடைவியா அஞ்சலை அயனே தருமெம்பாவாய் ! 24
மாற்றாரை வீட்டியே மரணத்தில் அழுத்துகின்ற
ஆற்றாமை தருவதும் அவமேயென அறநூலின்
கூற்றாக நெறிப்பட்டமை கலைவாணி தந்தபுலத்
தேற்றத்தா லன்றிவேறு தெரிவாயிலேது ? இருக்கன்
ஊற்றத்தின் பாங்கினால் உயிர்களை வதையாதவர்
வேற்றுமை களையறுத்து விலக்கு நன்நெறியினால்
மாற்றார் பகையழிந்து மாற்றுடைய ராகுவதால்
ஏற்றானிலை கைப்படை ஏதுமேலோ ரெம்பாவாய் ! 25
ஆதிப்பிரமன் படைப்பில் அயனுள் தானே புகுந்ததால்
வேதனைக் காண்மினீர் ! விழைவுகள் அவனருளால் ;
வீதியின் மாக்கோலமிட்டு விழவெடுத்து நோற்பீர்காள் !
மோது பகைமுற்றும் மாளும் அன்புக்கரங்களும் நீளும்
யாதும் நன்மைக்கென்று ஏகுமனம் நாளும் ; தத்தமது
போது வரும்வரையில் பொறுத்தாரே மகிழ்வர்தாம் ;
போதனிணை கழல்நாடிப் போற்றுவீர் ! விதிவரையும்
நாதனயனே அரியர்ர்க்கென நாட்டேலோ ரெம்பாவாய் ! 26
நோற்றவுடன் விதிமாறும் நோக்குடையர் அறிமினீர் ;
மாற்றந்தரு நான்முகன் மனத்துட் புகக் காண்பீர் ;
சேற்றினில் வளர்மரைபோல் செவ்விய அறவழியில்
ஊற்றமும் மிகுந்திடும் உலகியற்கை தளர்ந்திடுமால் ;
காற்றினும் கடுகியுளம் கசியும் பிறர்க்காய் ; புனல்
ஊற்றாகுங் கண் அயனை உலகு துறத்தல் காணாது ;
ஆற்றும் நித்தியவினை அனைத்திலும் அறனிருப்ப ;
போற்றிடும் புத்தேள் புகுமினேலோ ரெம்பாவாய் ! 27
தென்னிலங்கை அவுணர் தம்பியருள் வீடணர்க்குத்
துன்னரும் புலநுட்பமும் தூமனமும் அறவழியென
மன்னிய வரமளித்த மிடாரியே தான் விதிமாற்றி
முன்னவனைத் துஞ்சலில் மூழ்கடித்த தறிவீரால் !
அன்னப்புள் ளேறிடும் ஐந்தவியின் துணையதனால்
பின்னியஊழ் வலைபடரப் போதன்செய் விதிமாற்றம்
நண்ணிடில் நமையணுக நமன்தமரும் நடுங்குவராம் ;
எண்ணிய எண்ணியாங்கு எய்திடுவீ ரெம்பாவாய் ! 28
இறையோன் பிரமனே இருக்கனாய்த் தோன்றிட்டு
முறையோ டிவ்வுலகம் முகிழ்ந்திடப் படைத்தவன் ;
வரைமகள் கேள்வனாய் வடிவுற்றுக் காலத்தால்
புரையின்றி ஆற்றலை மாற்றிடும் பணிபுரிவான் ;
மரைமகள் மாலோனாய் மங்காது காத்திடுவான் ;
வரையறுக்கப் பட்டதோர் வாழ்வுடைப் புவனமாய்க்
குறையொன்றுஞ் சேராக் கூர்த்தநல் ஞானத்தொடு
நிறைத்தான் கழலிணை நண்ணேலோ ரெம்பாவாய் ! 29
வரைமருகன் நுதற்கான்றதும் மனையாள் மருகனையே !
சரவணத்திடை வீரியமாய்ச் சிந்தியதும் முருகனையே !
மறைமுனிவன் பத்தினியைப் புணர்ந்திட்டது இந்திரனே !
மறைமீட்டோன் விருந்தையை மயக்கியதும் வன்திறமே !
நிறைகுணத்த பெயருடைய நீசத்தினர் இவர்க்குமே
குறையகல விதிசெய்து கோயிற் பூசைகள் அளித்த
புரையற்ற நான்முகனார் புல்லரக்கும் அருளியபோல்
குரைகழல் அணைந்தநமைக் கொள்வதுறுதி யெம்பாவாய் !