தனியன்
வேறொன்றும் நானறியேன் வேதம் பறைசாற்றும்
பாருலக நாதன் பிரமனே – ஆருயிர்க்கு
மாறும் விதிசெய்ய வல்லனாம் மன்பதையீர் !
கூறுமின் பல்லாண்டு அயற்கு !
**************
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு
பலகோடி நூறாயிரம் – சொல்லாளும்
திண்தோள் சதுமுகனே ! உன் சேவடி
செவ்வித் திருக்காப்பு ! 1
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு !
வடிவாய் நின் நாவதனில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு !
வடிவார் சோதிச் சுடர்ஞான வெள்ளோதிமமும் பல்லாண்டு !
விடையூரும் ஈசனும் மாலும் விழைந்தேத்துவர் பல்லாண்டே ! 2
வாழாசை எண்ணங்கொண்டீர் வந்து மலரவன் களபம் கொள்மின் ;
ஊழாட்பட்டு கெட்டாலும்நும் விதி மாற்றிடும் உகப்புடையன் !
ஏழாட்காலும் தவிர்த்தோரும் ஏகுதி அவன்பொற்றா ளடையப்
பாழாகுங் காண் பாரிற் பண்டை வல்வினை யாவும் பல்லாண்டே ! 3
கூடு சாய்ந்திட்டேகு முன்னர்நீர் வந்தெங்கள் குழாம் கலந்து
பாடு நிலையடைவீர்காள் ! பண்டுறு விதிமாற்ற வல்லானை
நாடி நின்றுய்யும் வழிகாண்பீர் ! நம்கொடு வினைகள் மாளத்
தேடு மனமுடையீர் ! இன்றே திருப்பட்டூர் சேர்மின் பல்லாண்டே ! 4
தந்தை தந்தை தந்தை யாவர்க்கும் முந்தை முற்காலந்தொட்டு
எந்தை பிறப்பித்த ஏழுலகம் தன்னுள் எண்பான் ஈரிரண்டாகிய
விந்தை யோனிகளுள் ஒன்றும் விரிஞ்சனை வழிபடாது விட்ட
மந்தையினின்று பிரிந்துநீவிர் மறையோனைப் பாடுமின் பல்லாண்டே ! 5
அடிமுடி தேடலில் தானிழிந்தும் அறுமுகன் வெய்சிறை யுழந்தும்
கடியுவர் வேலை அடலாகிக் கண்ணுதல் மன்றற்கென மாண்டும்
வடிவிலா மறைதனைப் பறிகொடுத்தும் வாமநேமியர் தாம்வாழ
முடிவிலா துலைந்த முதன்மூர்த்தியைப் புட்கரத்தே காண் பல்லாண்டே !6
சென்னி ஐந்தனுள் ஒன்றழித்த சிவனாருடன் சேர்ந்து உலகுக்காய்ப்
பன்னிரு இலிங்கம் நாட்டிதிருப் பட்டூர் அமர்ந்து விதிதிருத்திப்
பொன்னற்குண் ணிலவுத் தேவாய்ப் பொலிந்திடு சீர்நான் முகனை
மன்னுநல் அடியவர் தமக்கவன் நல்குவன் மங்கலம் பல்லாண்டே ! 7
கச்சி நகரிடந் தேர்ந்தொரு வேள்வியிற் காசினியோர் உய்ய
இச்சித் திறங்கி முன்னின்று இந்திரா தியரொடு ஆகுதி வழங்கி
அர்ச்சையின் மூர்த்தி அரியை அத்திகிரி அருளாளனாய்ப் பெற்று
மெச்சும் பத்திசெய் வண்ணமளித்த மலரவன் வாழி பல்லாண்டே ! 8
சன்ம சன்மாந்தர மாயும்பலச் சதுர்யுக மாயும் பிறந்திழிந்துக்
கன்மமாயை அகந்தை மற்றும் காழ்ப்பிற் களித்திட்டக் கயவனைப்
புன்மனத்தக் கொடுவாழ்க்கை உகந்த பூணிக்குளம்பின் தூசென்னை
மென்மனத் தொடுவிதி மாற்றிய மிடாரியைப் பாடுமின் பல்லாண்டே ! 9
ஒருதேவின் இருவயிற்றுப் பூவுதித்தும் மும்மறை யும்நாற் சிரமும்
அருபடைப் பைங்கரணமும் சமயம் ஆறினுள் தான் எழுவதன்றிப்
பெறுமெட்டு சித்தியின் பெருந்தலைவிப் பொலிநாவும் அன்னத்தின்
இருக்கையும் கொண்ட நவமான இறையயனே என்க பல்லாண்டே ! 10
நான்முகன் திருப்பல்லாண்டு முடிவுற்றது