1. ஆன்மாவுக்குப் பிறப்பு இறப்பு உண்டா ?
பஞ்சபூத உடலைப் போன்ற பிறப்பு இறப்பில்லை ஆன்மாவுக்கு…! ந ஜாயதே ம்ரியதே வா….. என்று கண்ணனால் கீதையிலும் நீரான் நனையாது நெருப்பால் எரியாது என்றும் உபநிடதங்களாலும் கூறப்பட்டுள்ளது. படைப்புக்கு முன் எங்கும் பிரளய நீரால் நிரம்பிய நிலையில் இறைவன் விராட புருடனாய் உருவெடுத்து நின்று தனது பாதங்களிலிருந்து பூமியினையும் செவியினின்று திசைகளையும் கண்ணிலிருந்து சூரியனையும் மனத்திலிருந்து சந்திரனையும் தனது உடலின் பல்வேறு பகுதிகளிலிருந்து மனிதர்களையும் படைத்ததாக புருஷ சூக்தம் என்ற தைத்திரிய உபநிடதப் பகுதி சொல்லுவதால் ( இக்கொள்கை நம் சமயத்தில் நில்லாதென்பது பின்பு உணரலாம்) சீவான்மாக்கள் என்னும் உயிர்களை தன்னிலிருந்தே பிறப்பித்ததாகக் கொள்ளலாம். இதுவே உயிரின் தோற்றம் எனில், சீவான்மாவுக்கு இது பிறப்பன்றோ ?
அங்ஙனமே, பிறவிக் கடலில் சிக்கி மூழ்கி, பக்தியில் திளைத்து, ஞானத்தில் தேறி வானத்தில் ஏறி வீடுபேறடையும்போது இறையுடன் ஒன்றி விடுவதால், தனித்தன்மை மறைவதால், அது இறப்பன்றோ ?
ஆக, ஆன்மாவுக்குத் தனித்தன்மையான தோன்றுதலும் மறைவதுமே பிறப்பிறப்பாம் !!
2. நான்முகன் என்னும் பிரம்மன் ஆன்மாவைப் படைக்கிறாரா ?
இல்லை. ஆன்மாவிற்குப் பஞ்சீகரண உடலமைத்து விதி என்னும் வழிநடத்தும் பாதையை வடிவமைக்கும் பணிசெய்பவர் நான்முகக் கடவுள்.
3. மனிதனைத் தவிர பிற உயிர்க்குப் பாவபுண்ணிய வினை உண்டா ?
பாவ புண்ணியங்கள் ( நம் நீதிநூல்களிலும் சாத்திரங்களிலும் சொல்லப்பட்டன மட்டுமின்றி நாமறியாதனவையும் சேர்த்து ) கருமவினை ஒட்டியே என்பதால் அவை ஒரு பிரதிவினையாம் ( ரியாக்ஷன் ). அதன் காரணம் வினை – எதிர்வினைக் கோட்பாடு. அதனால் எண்ணம் / மனம் இல்லா உயிர்களுக்குச் சேராது. தேவையின் / உணர்வின் அடிப்படையில் இயங்கும் (Instinct based) உயிர்கள் பாவபுண்ணிய கருமங்களைச் செய்யத் தெரியாதமையாற் கருமவினை இல்லை.
4. ஆறு அறிவிற்குக் குறைந்த உயிர்களில் முற்பிறவி வாசனைப்
பதிவுண்டா ?
வினையே பதிவாகாது என்கையில் முன்வினைக்கும் பின்வினைக்கும் இடமில்லை !
5. மனிதனாயிருந்த ஆன்மா ஆறறிவிற்குக் குறைந்து பிறவியெடுத்தால், எங்ஙனம் மீண்டும் மனிதப் பிறவியெடுப்பது ?
ஆறறிவிற்குக் குறைந்த பிறவி அடைந்த மனித ஆன்மா வினைப் பதிவில்லாத காரணத்தால் பரிணாம வளர்ச்சி மூலமாக மட்டுமே மீண்டும் மனிதனாக முடியும்.
6. ஒரு சீவான்மா எடுக்கும் ஒவ்வொரு பிறவியின் போதும் தலைவிதி எழுதப்படுகிறதா அல்லது ஒரே முறை அத்தனை பிறவிக்கும் சேர்த்தெழுதப் படுகிறதா ?
முதல்முறை நான்முகன் எழுதிய விதியே தலைவிதியாகும். தலை என்ற சொல் ‘ முதல் ‘ என்பதையே குறிக்கும். சிரம் என்ற உடலுறுப்பைக் குறிக்காது ! அம்முதற் பிறவியின் கருமவினைகளே பிற்பிறவிகளுக்குக் காரணமாய் அமைகின்றன. அங்ஙனமே பிறவிகளும் கருமவினைகளும் தொடர்கின்றன.
7. விதி மாற்றக் கொள்கை உண்மையா ? நடக்குமா ?
கருமவினைகளால் ஏற்படுவது விதி. இதற்கும் இறைவனுக்கும் ஒரு தொடர்பும் இல்லை ! இது பிரக்ருதி என்ற செயல் முறைப்பாட்டு ஒழுங்கு விதிகளால் இயக்கபடுகிறது. இது ஒரு மென்பொருள் போலச் செயல்படுவதால், நம் மனம் உடல் ஆகிய வன்பொருட்கள் இதன் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. இதை மாற்ற வேண்டுமெனில், மென்பொருளில் மாற்றம் செய்தால் போதுமானது. இதையே விதிமாற்றம் எனச் சொல்லலாம். இதைச் செய்ய இதை ஆக்கிய படைப்பாற்றலான நான்முகனால் மட்டுமே இயலும் என்பதால் விதிமாற்றம் நடக்கக் கூடியதே ! நடந்துமிருக்கிறது ! சான்றுகள் உண்டு !
8. எங்ஙனம் விதிமாற்றம் கேட்பது நான்முகனிடம் ?
இறைவன் புகழ்ச்சிக்கு மயங்கியும் பக்திக்குக் கட்டுப்பட்டும் வரமருள்வதாக நம்ப வைத்திருக்கிறது நம் சனாதன தர்மம் ! ஆனால் உண்மையில் எப்புகழ்ச்சிக்கும் இறை ஆற்றல் மயங்குவதில்லை ! மயக்கம் என்பதே இல்லாதது இறை ஆற்றல் என்று கூறிப் புகழ்த்துதியும் தோத்திரமும் பாடி மயங்கச் செய்ய முனைவது பேதைமையிலும் பேதைமை ! எக்கட்டுப்பாட்டிற்கும் உட்படாத இறைவன் பக்தி என்னும் அன்பிற்கு மட்டும் கட்டுப்படுவானா என்றால் இல்லை என்பதே விடை ! பின் பக்தியினாலன்றி வேறு எதனால் கட்டுப்படுவான் ? எதற்கும் கட்டுப்படாதவன் என்ற குணமுடையவனைக் கட்டுப்படுத்த முனைவது அறிவீனமே !
அப்படியெனில், பக்தியினால் ஆவதென்ன ? பக்தியென்னும் அன்பு செலுத்துவதால் இறையாற்றலின் அருகாமை உணரப்படும் ! அவ்வன்பு அபரிமிதமாய்ப் பெருகும்போது நமது மனப்பரிமாணம் விரிவடைகிறது. அதனால் இறையின் நெருக்கம் உணரப்படுகிறது. இதையே சாயுஜ்யம் என்பர் ! இது முக்தியின் நான்கு நிலைகளுள் ஒன்று ! அடுத்து, தியானம், தவம் ஆகியவற்றின் சின்னங்களாக, அவன் திருக்கைகளில் அக்க மாலையும் கமண்டலமும் காணப்படுவதால் இவையிரண்டும் நமக்குதவும் சாதனங்களாம் ! இவற்றுள் தியானம் என்பது தினமும் செய்வது. தவமென்பது ஒரு குறிப்பிட்ட நோக்கத்தின் பொருட்டு மேற்கொள்ளப் படுவது !
தவம் செய்தலால் ஒருநிலைப்படுத்திய மனதின் வேகம் கூடி இலக்கு நோக்கித் தெளிவாகப் பயணித்தல் கண்டு, நமக்குத் தவத்தைக் காட்டியது சமயநெறி. தவம் என்றால் காட்டில் யாருமற்ற இடத்திலமர்ந்து உண்ணாமல் உறங்காமல் ஓம் ஓமென்று உச்சரிப்பதல்ல ! ஒரு தகைசான்ற பண்பில் நிலைநின்று அதனைக் கைவிடாது வாழ்ந்து வருதலும் தவமே ! எடுத்துக் காட்டாக, உண்மையே பேசுவது என்ற கொள்கையில் வாழ்ந்த அரிச்சந்திரன், கொடிய துன்பத்துள் வீழ்ந்தாலும் பெறற்கரிய இடத்தை அல்லவா பெற்றான் ! அது அவன் தவத்திற்குக் கிடைத்த வெற்றியல்லவா ?
எனவே, தியானம், தவம் அதன் பாங்கான நோன்பு, விரதம் போன்ற அறம்பிறழா நெறிகளின் துணையால் நான்முகனிடம் வரம் பெறலாம். இதனைத் திருஞானப்பாவை 20, 22. 27ம் பாடல்கள் தெளிவாக்குகின்றன. இப்படி அயனிடம் கேட்டால் எப்படி அவனால் மறுக்க இயலும் ? 28ம் பாடலில் உள்ளபடி, விதிமாற்றும் ஆற்றலுடையவனை விட்டுவிட்டுப் பிற ஆற்றலுடைத் தெய்வங்களிடம் இயலாததைக் கேட்பதினால்தான் பலருக்கும் கேட்டபடி நடப்பதில்லை ! நான்முகனால் இயலாததில்லை என்பதால் அவரவர் கருமவினை நிலை எதுவான போதிலும் அதற்கேற்ப விதிமாற்றி வரம் அருள்கிறான் இம்மையிலேயே ! விதி என்றே பெயர் கொண்டவனன்றோ நான்முகன் !!!